Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 24 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகம் விதிமுறைகளை மீறி அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும், ராசி மணல் என்ற இடத்தில் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட வலியுறுத்தியும், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் பி ஆர் பாண்டியன், ஐந்து நாள் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 20 ஆம் தேதி காவிரி கடலுடன் பூம்புகாரில் தன் பிரச்சாரப் பயணத்தை துவங்கிய அவர், காரைக்கால், நாகை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் வழியாக இன்று மயிலாடுதுறை வருகை தந்தார்.
அப்போது பேட்டியளித்த அவர்,
அரசியல் சுயலாபத்திற்காக கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார் மேகதாட்டு அணையை கட்ட முயற்சி செய்கிறார். இதற்கு கர்நாடக விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இல்லை.
இதன் காரணமாக கடந்த 13 ஆம் தேதி அவர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் தோல்வி அடைந்தது. தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
பற்றாக்குறை காலத்து நதிநீர் பங்கிட்டின்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நமக்கு தினமும் 6000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் கர்நாடகம் திறக்க மறுக்கிறது.
நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு அளித்ததை கர்நாடகா அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை ஆணையத்திற்கு இருக்கிறது இது குறித்து பிரதமர் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராசி மணலில் அணை கட்டுவது குறித்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஆதரவு தர வேண்டும் என்று நேரில் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN