Enter your Email Address to subscribe to our newsletters

காளையார்கோவில் , 24 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சாலையில் இன்று காலை அரசு பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் மினி பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது.
எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதாமல் இருக்க மினி பேருந்து ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் பலமாக மோதியது.
இந்த விபத்தில் மினி பேருந்தில் பயணம் செய்த நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காளையார்கோவில் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b