Enter your Email Address to subscribe to our newsletters

ரேபரேலி, 24 செப்டம்பர் (ஹி.ச.)
சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று ஒருநாள் பயணமாக ரேபரேலிக்கு தனது கட்சியின் ‘பி.டி.ஏ ரதத்தில்’ செல்கிறார். அங்கு ஹர்சந்த்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராகுல் லோதியை சந்தித்து, உள்ளூர் கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
லக்னோவில் உள்ள 1-விக்ரமாதித்யா மார்க் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து காரில் புறப்படும் அகிலேஷ் யாதவ், ரேபரேலி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, பச்ராவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருவா கிராமத்தில் நிறுத்தி, அங்கிருந்து ‘பி.டி.ஏ ரதத்தில்’ ஏறி ரேபரேலி நகரம் வரை பேரணியை வழிநடத்த உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த பி.டி.ஏ ரத பயணம் ரேபரேலியில் உள்ள அரசு இண்டர் கல்லூரி மைதானம் 2-ல் நிறைவடைகிறது. அங்கிருந்து அவர் கார் மூலம் சதர் கோத்வாலி, கண்டாகர் சௌராஹா அருகே உள்ள சக் அகமத்பூர் நசூலில் உள்ள சமாஜ்வாதி எம்.எல்.ஏ ராகுல் லோதியின் இல்லத்திற்கு சென்று தேநீர் விருந்தில் கலந்துகொண்டு சந்திப்பு நடத்துகிறார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அப்பகுதியின் அரசியல் நிலவரங்கள் குறித்து கட்சி தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் அமைப்பு ரீதியான ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் கார் மூலம் லக்னோ திரும்புகிறார்.
ரேபரேலியில் சமாஜ்வாதி சத்ர சபைக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து இந்த பயணம் அமைந்துள்ளது. இந்த அடக்குமுறையின்போது மாவட்ட காவல்துறையினர் தன்னை தாக்கியதாக எம்.எல்.ஏ ராகுல் லோதி குற்றம்சாட்டியிருந்தார், ஆனால் இந்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.
ராகுல் லோதிக்கு ஆதரவாக ரேபரேலிக்கு சென்று சந்திக்கப் போவதாக அகிலேஷ் யாதவ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலியில் இந்த பி.டி.ஏ ரத யாத்திரை தொடங்குவது, 2027-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையின வாக்காளர்களை உள்ளடக்கிய தனது கூட்டணியை பலப்படுத்த சமாஜ்வாதி கட்சி மேற்கொள்ளும் ஆரம்பகட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b