Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 24 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக பல வார்டுகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், சந்தை பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கார்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆறுமுனை சந்திப்பில் திரண்டு இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது தனியார் நிறுவனத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய அவர்கள், உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ கார்த்திகேயன் பேசுகையில், அரசு மக்கள் வரிப்பணத்தில் தனியார் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தும், அந்த நிறுவனம் பணியை முறையாக செய்யாமல் மெத்தனமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசே நேரடியாக குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b