Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு எதிரான ராகிங், கேலி, கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதன்படி, பள்ளிகளில் மாணவர் நல அலுவலர்களாக செயல்படும் ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்களுடன் இணைந்து மாணவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். உடல் ரீதியான தண்டனை, துன்புறுத்தல், கேலி செய்தல் மற்றும் ராகிங் உள்ளிட்ட செயல்கள் பள்ளிகளில் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எதிராக ஏதேனும் அத்துமீறல்கள் நடைபெற்றால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து, தேவையான மருத்துவ மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் உரிய ஆலோசனைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி நுழைவாயில், தகவல் பலகை, ஆசிரியர் அறை உள்ளிட்ட மாணவர்கள் எளிதில் பார்க்கக்கூடிய இடங்களில் பள்ளிக்கல்வி உதவி எண் 14417, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மற்றும் டெலி-மானாஸ் மனநல உதவி எண் 14416 ஆகியவற்றை தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஈரப்பதம் காரணமாக பலவீனமடையும் சுற்றுச்சுவர்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும், சேதமடைந்த சுவர்கள் மற்றும் விளையாட்டுப் பகுதிகளில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உடைந்த விளையாட்டு உபகரணங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பேருந்துகள் மற்றும் வேன்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும், ஓட்டுநர்கள் மற்றும் வாகன உதவியாளர்களின் பின்னணி குறித்து முறையாகச் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி சமையலறை, குடிநீர் வசதி, எல்பிஜி மற்றும் மின் இணைப்புகளின் பாதுகாப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் அனுமதியின்றி வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்கவும், பள்ளி நேரத்தில் மாணவர்கள் வெளியே செல்வதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு வசதிகளை தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் எழுத்துப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்காமல் உடனடியாக தொலைபேசி மூலம் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P