கீவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் - இருவர் பலி, 6 பேர் காயம்
கீவ், 24 செப்டம்பர் (ஹி.ச) உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர் என்று மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். ஏவுகணைகளின் இடிபாடுகள
Russian missile attack on Kyiv – two killed, six injured.


கீவ், 24 செப்டம்பர் (ஹி.ச)

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று அதிகாலை ரஷ்யப் படைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர் என்று மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். ஏவுகணைகளின் இடிபாடுகள் தலைநகரின் பல மாவட்டங்களில் விழுந்ததாக அவர் கூறினார்.

டெலிகிராம் செயலியில் பதிவிட்டுள்ள கிளிட்ச்கோ, உயிரிழந்தவர்களில் ஒருவர் மகப்பேறு மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஆறு பேரில் மூவர் மருத்துவப் பணியாளர்கள் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவமனையின் முகப்புப் பகுதியும் அருகில் உள்ள கிளினிக்கும் சேதமடைந்துள்ளன. தலைநகரின் மூன்று மாவட்டங்களில் இடிபாடுகள் விழுந்ததாகவும், குடியிருப்பு பகுதி ஒன்றின் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் மேயர் கூறினார்.

பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களிலேயே இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 16 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் தனியார் வீடுகளும் சேதமடைந்ததாக கீவ் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மாஸ்கோ மீதான அழுத்தம் போதுமானதாக இல்லாததால் தான் இத்தகைய தாக்குதல்கள் தொடர்வதாகக் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பாளர் மீதான அழுத்தம் முழுமையானதாக மாறாததால் தான் இது போன்ற ஒவ்வொரு தாக்குதலும் நடக்கிறது, மேலும் பாலிஸ்டிக் பயங்கரவாதத்தை தொடர்ந்து நம்பியிருக்க முடியும் என்று ரஷ்யா கருதுகிறது என்று நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்றுள்ள ஜெலென்ஸ்கி டெலிகிராமில் எழுதியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட லிண்ட்சே கிரஹாமின் ரஷ்ய தடைச் சட்டம் குறித்து தான் விவாதித்துக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக அவர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்குப் பிறகு பல வெடிச்சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதிகாரப்பூர்வமற்ற டெலிகிராம் சேனல்களில் வானத்தில் தீப்பிழம்பு எரிவது போன்ற காட்சிகள் வெளியாகின. நேற்று முழுவதும் ரஷ்யப் படைகள் நகரத்தின் மீது தாக்குதல்களைத் தொடர்ந்ததாகவும், அதில் இருவர் உயிரிழந்ததாகவும் 45 பேர் காயமடைந்ததாகவும் கிளிட்ச்கோ தெரிவித்திருந்தார்.

கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசாவில், ரஷ்யாவின் இரவு நேர தாக்குதல்களில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவ, கல்வி நிறுவனங்கள் சேதமடைந்ததாக அந்நகரின் ராணுவ நிர்வாகத் தலைவர் செர்ஹி லைசாக் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

அவர் மேற்கொண்டு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.

Hindusthan Samachar / vidya.b