Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 24 செப்டம்பர் (ஹி.ச.)
கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள இருப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாபரணங்களின் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழக பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 445.78 கிராம் எடையுள்ள தங்கக் கிரீடம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
தங்கக் கிரீடம் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் அதே வடிவமைப்பில் மற்றொரு கிரீடம் இருந்துள்ளது. அதனை ஆய்வு செய்தபோது, அது தங்கத்தால் செய்யப்பட்டதல்ல என்பதும், போலி உலோகத்தால் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த போலி கிரீடத்தின் எடை சுமார் 240 கிராம் மட்டுமே என கூறப்படுகிறது.
இதையடுத்து, 445.78 கிராம் எடையுள்ள உண்மையான தங்கக் கிரீடம் எப்போது மாற்றப்பட்டது? அதற்குப் பதிலாக வைக்கப்பட்ட போலி கிரீடம் எவ்வாறு இருப்பு அறைக்குள் கொண்டுவரப்பட்டது? இதில் யார் சம்பந்தப்பட்டுள்ளனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே, ஆரண்முளாவில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சபரிமலை மற்றும் ஆரண்முளா இருப்பு அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவாபரணங்களின் பாதுகாப்பு குறித்து மேலும் கேள்விகள் எழுந்துள்ளன.
இரு இடங்களிலும் திருவாபரணங்களின் முழுமையான கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கணக்கெடுப்பு முழுமையாக நிறைவடைந்த பின்னரே மேலும் எத்தனை தங்க ஆபரணங்கள் அல்லது பிற திருவாபரணங்கள் காணாமல் போயுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P