ரேபரேலியில் அகிலேஷ் யாதவை கிருஷ்ணராக சித்தரித்து சமாஜ்வாதி கட்சி பேனர்
ரேபரேலி, 24 செப்டம்பர் (ஹி.ச.) 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அடங்கிய தனது கூட்டணியை இலக்காகக் கொண்டு மத்திய உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பரந்த அளவில
ரேபரேலியில் அகிலேஷ் யாதவை கிருஷ்ணராக சித்தரித்து சமாஜ்வாதி கட்சி பேனர்


ரேபரேலி, 24 செப்டம்பர் (ஹி.ச.)

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அடங்கிய தனது கூட்டணியை இலக்காகக் கொண்டு மத்திய உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி பரந்த அளவிலான அணிதிரட்டல் முயற்சியின் ஒரு பகுதியாக 'பிடிஏ ரதம்' பயணத்தை தொடங்கியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவின் 'பிடிஏ ரதம்' வருகையை முன்னிட்டு இன்று ரேபரேலியில் அவரை பகவான் கிருஷ்ணராக சித்தரிக்கும் பிரமாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி யுவஜன் சபாவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் விஸ்வாஸ் துபேயால் முக்கிய சாலையோரம் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ், மயிலிறகு கிரீடம், பாரம்பரிய மஞ்சள் நிற ஆடை மற்றும் புல்லாங்குழலுடன் கிருஷ்ணர் வேடத்தில் அந்த பேனரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். உள்ளூர் கட்சி தொண்டர் ஒருவர் சுதாமராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அந்த பேனரில் யாதவ் 'பிடிஏ மகாநாயக்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேரே மாதவ், ஆப்கா சுதாமா கி தர்த்தி ரேபரேலி மே ஸ்வாகத் ஹை! (என் மாதவனே, சுதாமாவின் பூமியான ரேபரேலிக்கு உங்களை வரவேற்கிறோம்!) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த பேனர் குறித்து ஹர்சந்த்பூர் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ராகுல் லோதி கூறுகையில்,

பாரதிய ஜனதா கட்சியின் மனநிலை நிச்சயமாக சீர்கெட்டது என்பதை நான் அறிவேன், நன்றாகவே புரிந்துகொள்கிறேன். அவர்கள் தங்கள் கொள்கைகளை சமூகத்தில் எவ்வளவு கடுமையாக செயல்படுத்த முயன்றாலும், ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன். அவர்களின் தலைவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு சாதி ரீதியாகப் பிரிப்பதில் வல்லவர்கள்.

தங்கள் சுயநலத்திற்காக மக்களை என்றென்றும் தங்களுக்குள் சண்டையிட வைத்துக்கொண்டே இருப்பார்கள். பேனர்களைப் பொறுத்தவரை, துவாபர யுகத்தில் சுதாமர் பகவான் கிருஷ்ணரின் தோழராக இருந்து அவருடன் இருந்தார். இந்த மரபு அந்தக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது, எனவே இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

லக்னோவிலிருந்து ரேபரேலிக்கு வந்து எம்.எல்.ஏ ராகுல் லோதியின் இல்லத்தில் தேநீர் அருந்துவதற்காக அகிலேஷ் யாதவ் வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இந்த பேனர் வைக்கப்பட்டது.

சமாஜ்வாதி சத்ர சபா மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) செயல்பாட்டாளர்களுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த வருகை அமைந்துள்ளது.

அந்த மோதலின்போது உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாக லோதி குற்றம் சாட்டியிருந்தார், ஆனால் அந்தக் குற்றச்சாட்டை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b