தனியார் பள்ளி அங்கீகாரத்தில் ரூ.100 கோடி மோசடி - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் உமாசங்கருக்கு சம்மன்
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்
Summons issued to former Minister Anbil Mahesh's aide, Umasankar.


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் உமாசங்கருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த புலனாய்வு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய தனியார் பள்ளிகள் தொடங்கவும், ஏற்கனவே இயங்கி வரும் பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், அமைச்சர் அலுவலகத்தில் செல்வாக்கை பயன்படுத்தி உதவுவதாகக் கூறி பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பள்ளி நிர்வாகிகள் பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரது நெருங்கிய உதவியாளரான வாளாடி கார்த்திக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணை வளையம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அமைச்சரின் மற்றொரு முக்கிய உதவியாளராக கருதப்படும் உமாசங்கருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு, பண பரிவர்த்தனைகள், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் உள்ள தொடர்பு குறித்து விரிவாக விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணைக்குப் பிறகு வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b