மதுரை கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ரூ.15.14 லட்சம் பறிமுதல்
மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரும் பொதுமக்களிடமிருந்து ஆவண எழுத்தர்கள் மூலமாக கள்ளிக்குடி சார்பதிவாளர் லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்
மதுரை கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ரூ.15.14 லட்சம் பறிமுதல்


மதுரை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரும் பொதுமக்களிடமிருந்து ஆவண எழுத்தர்கள் மூலமாக கள்ளிக்குடி சார்பதிவாளர் லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, சார்பதிவாளர் ராஜேஸ்வரி, ரியல் எஸ்டேட் தரகர் தனசேகரன் என்பவருடன் காரில் அலுவலகத்தை விட்டு வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தனசேகரனின் காரை சோதனையிட்டனர்.

அந்த சோதனையில் ரூ.15.14 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சார்பதிவாளர் ராஜேஸ்வரியின் கைப்பையை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கு வழங்கப்படவில்லை என்றும், பத்திரப்பதிவுக்காக பெறப்பட்ட லஞ்சப் பணமாக இருக்கலாம் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக சார்பதிவாளர் ராஜேஸ்வரி மற்றும் தரகர் தனசேகரன் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆவண எழுத்தர்களிடமும் விசாரணை தொடர்கிறது.

Hindusthan Samachar / vidya.b