மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் -தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வ
By Election


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அரசாக புதிய தமிழக வெற்றிக் கழக அரசு விளங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையும், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய்யும் மக்களுக்கு நேர்மையான ஆட்சி, வெளிப்படையான செயல்பாடு மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குறைந்த நாட்களிலேயே தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆதரவு அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த இரு தொகுதிகளிலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார்.

Hindusthan Samachar / ANANDHAN