பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் - தமிழக அரசு தீவிர பரிசீலனை
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச) சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய
New Secretariat at 'Pallavan Illam'


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச)

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் முடிவில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதற்காக பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டுவசதி வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், கடலோரப் பகுதியில் இந்த பிரமாண்ட வளாகம் அமைவதற்கு மீனவ அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறும் செயலாக அமையும் என அவர்கள் வாதிட்டு வருகின்றனர். இந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை அரசு கைவிடுவதாக தற்போது தகவல் பரவியுள்ளது.

இதற்கு மாற்றாக, சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளதாகவும், இது போக்குவரத்து வசதிகள் நிறைந்த, அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகக்கூடிய மையப் பகுதியாக இருப்பதால் இந்த இடம் பொருத்தமாக இருக்கும் என அதிகாரிகள் கருதுவதாக தெரிகிறது.

இது தொடர்பாக உயர் அதிகாரிகள் குழு பல்லவன் இல்ல வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள கட்டிடங்களின் நிலை, போக்குவரத்து நெரிசல் மேலாண்மை மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b