Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 24 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. த.வெ.க. சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதன்படி, வரும் செப்டம்பர்
30-ம் தேதி தாராபுரம் உடுமலை சாலை மாருதி நகர் பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேச உள்ளார்.
பொதுக்கூட்டத்திற்காக மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, திடலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 4-ம் தேதி தாராபுரம் தொகுதியில் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ருத்ராவதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர் வழியாக தாசர்பட்டி வரை வாகனப் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாராபுரம் தொகுதியில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. வேட்புமனு பரிசீலனையின் முடிவில் 22 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர்
30-ம் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக தயாராகி வரும் மாருதி நகர் திடலின் கழுகுப் பார்வை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் கூட்ட ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam