Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 24 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து மஹோபா நோக்கி நேற்று இரவு 35 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இரவு நேரம் என்பதால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
யமுனா விரைவுச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக கவனிக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் பேருந்துக்குள் புகைமூட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து பயணிகள் விழித்தெழுந்து வெளியேற முயன்றனர். சிலர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர்.
இதற்கிடையே புகைமூட்டம் அதிகரித்ததால் சில பயணிகள் மயக்கமடைந்தனர். இதனால் அவர்களால் பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை. தொடர்ந்து தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
குளிர்சாதன அமைப்பில் வெடிப்பு
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில், பேருந்தில் இருந்த குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA