Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 03 செப்டம்பர் (ஹி.ச.)
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நினைவு தினத்தையொட்டி, மாநில காங்கிரஸ் கட்சி துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் பழைய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவன் கல்யாண் கடந்த ஆண்டு காக்கிநாடா மாவட்டம் உப்பாடாவில் நடைபெற்ற மீனவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் கடல் வளமும், மீன்வளமும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார்.
மேலும், அப்பகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து குறிப்பிடும்போது நக்கப்பள்ளி சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
அப்போது பவன் கல்யாண், “2005-ம் ஆண்டு முதல் நக்கப்பள்ளி SEZ-ஐ ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிதான் தொடங்கினார். இதை ஜனசேனா கட்சியோ, வேறு எந்த கட்சியோ செய்யவில்லை. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிதான் இந்த திட்டத்தை முன்மொழிந்து கொண்டு வந்தார் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவைத்தான் தற்போது ஒய்.எஸ்.ஆர். நினைவு தினத்தையொட்டி ஆந்திர காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதனுடன், “அரசியல் எப்படி இருந்தாலும், ஒய்.எஸ்.ஆர். செய்த பணியின் வலிமை எவ்வளவு என்பதை இந்த வார்த்தைகளே கூறுகின்றன” என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு, அவரது அரசியல் எதிரணியைச் சேர்ந்த பவன் கல்யாணின் வார்த்தைகளே சாட்சியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி இந்த பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது ஆந்திர அரசில் துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் பதவி வகித்து வரும் நிலையில், அவர் முன்பு ஒய்.எஸ்.ஆர். ஆட்சியின் ஒரு திட்டத்தை பாராட்டிப் பேசிய வீடியோவை காங்கிரஸ் மீண்டும் வெளியிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒய்.எஸ்.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட இந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் ஆந்திர அரசியல் வட்டாரங்களில் ஒய்.எஸ்.ஆர். ஆட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பவன் கல்யாணின் பழைய கருத்துகள் குறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA