விதி 110-ன் கீழ் புதிய திட்டங்களை அறிவிப்பது ஏன்? - சீமான் கேள்வி
தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2
சீமான்


தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை, குறைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விதி 110-ன் கீழ் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் அறிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசின் அனைத்து திட்டங்களும் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்படுமானால், தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதும், அதன் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடத்துவதும் எதற்காக என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசின் முக்கியத் திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், அமைச்சர்கள் சார்ந்த துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சரே வெளியிடுவது அமைச்சர்களின் தனித்துவத்தை குறைக்கும் வகையில் உள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி எனவும், எரிவாயு உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.10,720 கோடி தொடர் செலவு தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த நிதியாண்டில் ரூ.1.76 லட்சம் கோடி கடன் வாங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.73,900 கோடி திட்டங்களுக்கான நிதியை அரசு எவ்வாறு திரட்டும் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பரத் திட்டங்களை விதி 110-ன் கீழ் அறிவிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P