Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இந்த விவாதத்தின்போது தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வசம் உள்ள முக்கிய துறைகளில் ஒன்றான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது.
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்பதால், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை எதிர்க்கட்சிகள் முக்கியமாக எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் விவாதங்களுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலளிக்க உள்ளார். நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நிகழ்வுகள் நடைபெறாது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்களாக உள்ளன.
இதையடுத்து வருகிற 7-ந்தேதி திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூடுகிறது. அன்றைய தினம் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க உள்ளார்.
மேலும், அந்தத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam