சட்டமன்றம்... பட்டிமன்றம்... ராஜ்மோகன் Vs உதயநிதி – சட்டசபையில் காரசார விவாதம்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. திட்டங்களு
விவாதம்


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

திட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் தற்போதைய அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், பல்வேறு திட்டங்களுக்கும் ஒரே பெயராக “தாய் மாமன் காது குத்தும் திட்டம்” என்று பெயரிடலாம் என விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியதுதான் மிகப்பெரிய காதுகுத்து” என பதிலடி கொடுத்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் மற்றும் குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி விமர்சித்தார். மேலும், தற்போதைய த.வெ.க. ஆட்சியில் குற்றங்களைத் தடுக்க “சிங்கப்பெண் அதிரப்படை” உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். “மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என்று சொல்லிக்கொடுத்ததே முந்தைய தி.மு.க. அரசுதான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் பி.எச்.டி. செய்தவர்கள் தி.மு.க.வினர்” என அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தான் சட்டசபைக்கு சரியாக வருவதில்லை என்ற அமைச்சர் ராஜ்மோகனின் குற்றச்சாட்டை மறுத்தார். “நான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன்; அதை பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

மேலும், அமைச்சர் ராஜ்மோகனின் அரசியல் பின்னணி குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், பட்டிமன்ற பேச்சாளராக இருந்த ராஜ்மோகன், அமைச்சராவதற்கு முன்பு பல மேடைகளில் தி.மு.க.வை ஆதரித்து பேசியதாகவும், தற்போது த.வெ.க.வில் இருப்பதால் தனது பேச்சை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவாதத்தின்போது ஓ. பன்னீர்செல்வமும் அவையில் கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலளிக்க கால அவகாசம் இருப்பதாகவும், முதலமைச்சர் கூறிய சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நிராகரித்தார்.

இதனால் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் அரசியல் ரீதியாக பரபரப்பாக மாறியதுடன், ராஜ்மோகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையேயான வார்த்தை மோதல் சட்டசபையில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam