Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விவிபேட் (VVPAT) பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதனையடுத்து வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வாக்குச்சாவடி எண்கள் 1, 17, 28, 32, 75 உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட் பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்பதற்கான வேறுபாடுகள் இருப்பதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் பதிவுகளையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் எனவும் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றி செல்லாது, மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதாக என அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே அத்தொகுதியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (EVM) முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேர்தல் முடிவை ரத்து செய்யக் கோருவதற்கு போதுமான ஆதாரங்கள் மனுவில் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட இவிஎம் இயந்திரத்தில் கோளாறு அல்லது முறைகேடு நடந்ததற்கான ஆதாரமும் முன்வைக்கப்படாத நிலையில், அனைத்து இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
Hindusthan Samachar / vidya.b