Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் கடந்த 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல முழு தடை விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் பழனி, திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற கோயில்களில் உள்ள நடைமுறைகளின் அடிப்படையில், புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,
கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
பொதுமக்களுக்கு சில இடங்களில் சிக்கலோ, பிரச்சனையோ இருக்கிறது என்றால் அதற்கு மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் தான் செய்யும். அதில் நாங்கள் எந்தவிதமாக தயக்கமும் காட்டமாட்டோம். கோயில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு ரூ.5 யை வாங்கலாமா வேண்டாமா? என்பதை கோயில்களே முடிவெடுக்கலாம் என்பதை சொல்லிருக்கிறோம். அதில் நாங்கள் எந்தவிதமான கட்டாயத்துக்கு உட்படுத்தவில்லை.
கோயில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது. அந்த 52 கோயில்களும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள். அந்த கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் சாமி குடும்பிடுவதற்கு தான் மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தான் நாம் அமல்படுத்தியிருக்கிறோம்.
அறநிலையத்துறை வேண்டாம் என்று நினைப்பவர்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள். பா.ஜ.க ஆளும் வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் செல்போன்களுக்கு தடை உள்ளது. எனவே இதில் உண்மையிலேயே பக்தர்களுக்கு ஏதாவது சிரமங்கள் இருந்தால் நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
கூட்டம் அதிகமாக வரக்கூடிய விஷேச நாட்களில் கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாப்புக்காக செல்போன்களை கோயில்களுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b