Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 03 செப்டம்பர் (ஹி.ச.)
சண்டிகர் - பஞ்சாப் எல்லையில் விவசாயிகளின் தொடர் முற்றுகைப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா சார்பில் செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அறிவிக்கப்பட்ட இந்த தர்ணா போராட்டத்தில் பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
தங்களது நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ பதிலும் அறிக்கையும் வரவில்லை என போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து பாரதிய கிசான் யூனியனின் மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாங்கள் 32 விவசாய அமைப்புகளின் கூட்டணியாக இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏனெனில் நாங்கள் நீண்ட காலமாக இந்த கோரிக்கைகளை எழுப்பி வருகிறோம். ஆளுநர், முதலமைச்சர், துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துள்ளோம். நான்கரை ஆண்டுகள் கடந்தும் யாரும் எங்கள் குரலைக் கேட்கவில்லை, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
பஞ்சாப் அரசு உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்த காலத்தில் செய்துகொள்ளப்பட்ட நீர் ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த பழைய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், மத்திய அரசு அண்மையில் அறிவித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த விவசாய சங்கங்கள் தயாராக உள்ளது. இந்த ஒப்பந்தம் உள்நாட்டு விவசாயத்தை பாதிக்கும் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே எதிர்ப்பு போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
விவசாயிகளின் மற்ற முக்கிய கோரிக்கைகளாக, 22 வகையான பயிர்களுக்கு மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், முறையான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பவை உள்ளன.
பெரு நிறுவனங்களின் லட்சக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்ய முடியும்போது, ஏன் எங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது? முறையான பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்
என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b