எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதாந்திர உதவித்தொகையை நிலுவைத் தொகையுடன் வழங்க உத்தரவு
விருதுநகர், 03 செப்டம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்து
Madurai High Court


விருதுநகர், 03 செப்டம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு எச்.ஐ.வி. தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி தனியாகவும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், வீடு வழங்க வேண்டும் என்றும், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. மேலும், அவரது உடல்நலத் தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை உள்ளிட்ட சில நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாதாந்திரம் ரூ.7,500 உதவித்தொகை சில மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நலத் தேவைகளுக்காக மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை ஏன் தொடர்ந்து வழங்கவில்லை என தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN