மேகதாது அணை திட்டத்தை விரைந்து பரிசீலிக்க வேண்டும் மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக மந்திரி வலியுறுத்தல்
பெங்களூரு , 03 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எத
A


பெங்களூரு , 03 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய அரசின் நீர் ஆணையத்திடம் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது. மேகதாது திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இதையடுத்து மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், மத்திய நீர் ஆணைய உறுப்பினர் யோகேஷ் பய்டங்கர் சமீபத்தில் கர்நாடகத்துக்கு வருகை தந்து, மேகதாது அணை கட்டப்பட உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி 4 நாட்கள் பயணமாக கடந்த 31-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய நீர் ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மேகதாது திட்டத்தின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை மந்திரி செலுவராயசாமி சுட்டிக்காட்டினார். மேலும், திட்டம் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து, மேகதாது அணை திட்டத்தை விரைவாக பரிசீலித்து தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA