ஓடும் ரெயிலில் விளக்கேற்றி பூஜை செய்த பயணி கைது- புசாவல் ரெயில் நிலையத்தில் அதிரடி நடவடிக்கை
புசாவல் , 03 செப்டம்பர் (ஹி.ச.) ஓடும் ரெயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது 55). இவர் டெல்லியில் இரு
A


புசாவல் , 03 செப்டம்பர் (ஹி.ச.)

ஓடும் ரெயிலின் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டிக்குள் விளக்கேற்றி பூஜை செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் கரீபா (வயது 55). இவர் டெல்லியில் இருந்து மைசூரு நோக்கி சென்ற ‘ஹசரத் நிஜாமுதீன்–மைசூரு எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

ரெயில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தபோது, கரீபா தனது பையில் இருந்து தீப்பெட்டி, பித்தளை விளக்கு மற்றும் எண்ணெய் டப்பாவை எடுத்து விளக்கேற்றி பூஜை செய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது. ரெயில் பெட்டிக்குள் விளக்கு எரிவதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், ரெயிலுக்குள் விளக்கேற்றுவது ஆபத்தானது என்றும், தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக விளக்கை அணைக்குமாறும் கரீபாவிடம் கூறினார்.

ஆனால், பூஜை முடியும் வரை விளக்கை அணைக்க முடியாது என்று அவர் பிடிவாதம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை டிக்கெட் பரிசோதகர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ரெயில் அடுத்ததாக புசாவல் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், கரீபாவை ரெயிலில் இருந்து இறக்கி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த தீப்பெட்டி, விளக்கு மற்றும் இதர பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார், ரெயில்வே சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில்களுக்குள் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, ஊதுபத்தி உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவது பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் பயணிகளை கடுமையாக எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA