Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரையில் செயல்பட்டு வரும் பிரபலமான ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2-வது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் செயல்பட்டு வரும் முக்கிய தனியார் கருத்தரித்தல் மற்றும் மருத்துவ மையங்களில் வரி தொடர்பான முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். சென்னை மற்றும் மதுரையில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மதுரையில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் இன்று 2-வது நாளாகவும் சோதனை நீடித்து வருகிறது. 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதலே அங்கு முகாமிட்டு, பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கருத்தரித்தல் சிகிச்சைக்காக நோயாளிகளிடம் பெறப்பட்ட கட்டணங்கள், அதற்கான கணக்கு விவரங்கள், வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா, சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கான வருமானம் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நிறுவனத்தின் கணக்கு ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற நிதி தொடர்பான பதிவுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற சோதனையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும் இன்று விசாரணை தொடர்வதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் மதுரையில் உள்ள பிரபல கருத்தரித்தல் மையங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாகவும், முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணக்கு விவரங்கள் மற்றும் வரி தொடர்பான முறைகேடுகள் குறித்து அதிகாரப்பூர்வமான முழு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam