Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில், சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழ் மொழியிலும் மந்திரங்களை பயன்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், தமிழக கோவில்களில் குடமுழுக்கு விழாக்களின்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
சில கோவில்களில் குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருதம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், எனவே இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ள குடமுழுக்கு தொடர்பான உயர்மட்ட குழுவின் அறிக்கையைப் பெற்று, அனைத்து கோவில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழியிலும் மந்திரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரானவர்கள், இதற்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களும் ஒலிக்கப்பட்டதாகவும், அதே நடைமுறை வரவுள்ள குடமுழுக்கு விழாவிலும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, மனுவில் கோரப்பட்ட நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P