Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்ற ராம்லீலா மைதானத்தில், தனது பொதுக்கூட்டத்துக்குப் பிறகு ‘தூய்மைப்படுத்துதல்’ என்ற பெயரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவை அவைத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ள கார்கே,
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அளித்த உறுதியை நினைவூட்டியுள்ளார். சம்பவம் நடைபெற்று 24 நாட்கள் கடந்தும், இதற்கு பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது இதுவரை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இது தனிப்பட்ட முறையில் என்னையோ அல்லது காங்கிரஸ் தலைவராக எனது பதவியையோ சார்ந்த பிரச்சினை அல்ல. இதுபோன்ற கொடுமையான உண்மையை அன்றாடம் எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது. இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்கப்பட வேண்டும்” என கார்கே குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட உறுதியையும், சம்பவத்தின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, ஹல்த்வானி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ‘தூய்மைப்படுத்துதல்’ சம்பவத்தில் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு ஜே.பி.நட்டா அறிவுறுத்த வேண்டும் என மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P