Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அரசுப் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பென்னட் சம்பவ இடத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் சம்பவம் தொடர்பான விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் தீண்டாமைப் புறக்கணிப்புகள் கடுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரங்கம்மா சத்திரம் பகுதியில் இருந்து புதுக்கோட்டை நகருக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு பேருந்துப் போக்குவரத்தே முக்கிய வசதியாக உள்ள நிலையில், குறிப்பிட்ட நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் முறையாக நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தில் ஏற முயலும் மாணவிகளை அவமதித்தல், கம்பிப் பிடியைத் தட்டிவிடுதல் மற்றும் தானியங்கி கதவு மூலம் மாணவிகளை ஆபத்துக்குள்ளாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 10 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக வாகன வசதி, செலவினத்தை எந்தத் துறை ஏற்க வேண்டும் என்ற நிர்வாக ரீதியான பிரச்சினையால் நிறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசுத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மையே தற்போதைய சம்பவத்துக்குக் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எனவே, பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் இரங்கம்மா சத்திரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதோ அல்லது மாணவிகளுக்கான தனி வாகன வசதியை மீண்டும் தடையின்றித் தொடங்குவதோ குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய விசாரணை நடத்தி, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற தீண்டாமை சம்பவங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் இனி நடைபெறாத வகையில் அரசு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ