Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 03 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செயல்பட்டு வரும் கரிஷ்மா என்ற தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெடிமருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஆலையின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுந்தது. சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததுடன், பலத்த வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், காவல்துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 தொழிலாளிகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, உரிமத்தை மீறி அதிக அளவில் வெடிமருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b