Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
திறந்தவெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயம் விற்பனையை தொடங்கியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் இந்த மலிவு விலை வெங்காய விற்பனை திட்டத்தை உணவு, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜா ஆகியோர் இணைந்து இன்று காலை தொடங்கி வைத்தனர்.
இதன்படி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய் என்ற மானிய விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சீரான முறையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ என்ற அளவில் வெங்காயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு சார்பில் சுமார் ஆயிரம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப மேலும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் கிராமப்புற ரேஷன் கடைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b