Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், அனைத்து பள்ளி மையங்களிலும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயர் பலகைகளை திட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே நிறுவ மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கனவே திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் புதிதாக திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள பள்ளிகள் என அனைத்து மையங்களிலும் பெயர் பலகை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.
பெயர் பலகை 4 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டதாகவும், சட்டகம் பிரைமர் மற்றும் பெயிண்ட் பூசப்பட்ட 1 அங்குல மென் எஃகுக் குழாயால் அமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் மற்றும் விவரங்கள் ஒளியில்லாத (Without Light) UV ஸ்டார் ஃப்ளெக்ஸ் முறையில் அச்சிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் பெயர் பலகையின் அளவு, வண்ணம் மற்றும் வடிவமைப்பு ஒரே சீராக இருக்க வேண்டும் என்றும், மாதிரி வடிவமைப்பின்படி பள்ளியின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை, பெயர் பலகைகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே சொந்த செலவில் வாங்கிப் பொருத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P