Enter your Email Address to subscribe to our newsletters

வாரணாசி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தொடர் மழை மற்றும் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து, வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆய்வு செய்தார்.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, பிரதமர் நதியின் நீர்மட்டம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவான தகவல்களை கேட்டறிந்தார்.
வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாமதமின்றி வழங்குவதற்காக, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
தேவைப்படும் இடங்களில் கூடுதல் நிவாரணப் பொருட்களை உடனடியாக ஏற்பாடு செய்யவும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய, வெள்ள நிலைமை மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளதன்படி, வாரணாசியில் கங்கை நதிக்கான எச்சரிக்கை நிலை 70.26 மீட்டராக உள்ள நிலையில், தற்போது நதி 70.28 மீட்டராக பாய்ந்து வருகிறது.
அபாய நிலை 71.26 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் மணிக்கு சுமார் இரண்டு சென்டிமீட்டர் வீதம் உயர்ந்து வருவதால், நதி அபாய நிலையை நெருங்கக்கூடும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்க, நதிக்கு செல்லும் பாதைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அசி படித்துறைக்கும் கேசவ் படித்துறைக்கும் இடையிலான படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஆற்றில் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் செப்டம்பர் 3 முதல் 8 வரை பரவலான வானிலை மாற்றம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
இன்று முதல் செப்டம்பர் 5 வரையிலும், 8-ம் தேதியும் ஆங்காங்கே மிதமான மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும், இந்த காலகட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் கங்கை ஏற்கனவே எச்சரிக்கை நிலையை தாண்டி பாய்ந்து வருவதால், வாரணாசி நிர்வாகம் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை உன்னிப்பாக கண்காணித்து, தீவிர விழிப்புடன் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b