Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 03 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23). திருமணம் ஆகாமல் வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வயிற்று வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மாரியின் மகன் அம்மாசி என்பவர்தான் கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாசியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய போலீசார், கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அவருடன் கோகிலாவையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி கோகிலா காணாமல் போய்விட்டதாக அம்மாசி, அவரது தந்தை பேராக்கவுண்டரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பேராக்கவுண்டர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை தேடி வந்தனர்.
இதனிடையே, வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவு பகுதியில் கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. கிணற்றை பார்த்தபோது வெள்ளை நிற சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் மூட்டை ஒன்று மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து மூட்டையை வெளியே எடுத்தனர். அதில் பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சடலம் காணாமல் போன கோகிலாவுடையதா என உறவினர்களை வரவழைத்து அடையாளம் காணப்பட்டது. அதில், சடலம் கோகிலாவுடையது என்பதும், அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோகிலா எவ்வாறு உயிரிழந்தார், அவரது சடலம் கிணற்றில் வீசப்பட்டதா, சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P