Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நகர்ப்புற ரேஷன் கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் இதன் விலை ரூ.80-ஐ தாண்டியதாக தகவல்கள் வெளியாகின.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் சுமார் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அதிகபட்சம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படும். வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்கள் மீது ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் இந்த குறைந்த விலை வெங்காய விற்பனை திட்டம் தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam