அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜவுளிப் பூங்காக்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக கொறடாவும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர், கடந்த அதிமுக ஆட்சி
S.P. Velumani urges.


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக கொறடாவும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அப்போது அவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட மினி ஜவுளிப் பூங்காக்கள் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி மற்றும் பின்னலாடை தொழிலை மேம்படுத்தவும், ஆயிரக்கணக்கான நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இந்த ஜவுளிப் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு அரசு அந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஜவுளிப் பூங்காக்களை உடனடியாக நிறைவேற்றி, தமிழகத்தை மீண்டும் ஜவுளி ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், விசைத்தறி நெசவாளர்களின் துயரத்தையும் அவர் பேரவையில் எடுத்துரைத்தார். தொடர்ந்து உயர்ந்து வரும் மின் கட்டணம், நூல் விலை உயர்வு மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால் விசைத்தறி கூடங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பல கூடங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த நெருக்கடியிலிருந்து நெசவாளர்களை மீட்க, தமிழக அரசு மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

விசைத்தறி கூடங்களின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைத்து சொந்தமாக மின்சாரம் தயாரித்துக் கொள்ள ஊக்குவிக்கும் வகையில், அதற்கான செலவில் 50 சதவீதத்தை அரசே மானியமாக வழங்க வேண்டும்.

இதனால் மின் கட்டண சுமை கணிசமாக குறைவதுடன், தடையில்லா மின்சாரம் கிடைக்கும், தொழிலும் நிலைத்து நிற்கும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b