Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 03 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் பள்ளிவிடைப் பகுதியில் செயல்பட்டு வரும் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, மற்றொரு மாணவியுடன் வேன் கட்டணம் தொடர்பாக கேட்பதற்காக பள்ளி அலுவலகத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தலைமை ஆசிரியர் ஜெயராஜ், உடன் வந்த மாணவியை வெளியே அனுப்பிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவியை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் கழுத்து மற்றும் கன்னத்தில் முத்தமிட்டதுடன், மாணவி அங்கிருந்து தப்ப முயன்றபோது அவரது கைகளைப் பிடித்து, நடந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
வீட்டிற்கு சென்ற மாணவி சோகமாக இருந்ததை கவனித்த அவரது தாய் விசாரித்தபோது, சம்பவம் குறித்து மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், 8 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடமும் தலைமை ஆசிரியர் இதேபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே, பொதுமக்கள் திரண்டதை அறிந்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பள்ளியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க சமயபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் கணேசன், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P