பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்து சிறப்பு குழு அமைக்கக் கோரிய வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள், ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்
உயர்நீதிமன்றம்


மதுரை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் செயல்பட்டு வரும் வேலம்மாள் கல்வி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள், ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகள் அச்சம் காரணமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து உடனடியாக புகார் அளிக்காமல் இருந்ததாகவும், இதனால் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக செயல்படுகிறதா என்ற கேள்வி எழுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக செயல்படுகிறதா, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணை நடைபெறுகிறதா, வெளி அழுத்தங்கள் மற்றும் தலையீடுகள் தடுக்கப்படுகிறதா, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ரகசியம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வேலம்மாள் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தற்போது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சம் காரணமாக மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தாமதமாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இதையடுத்து, மாணவிகளின் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தற்போது ஏதேனும் குழு செயல்படுகிறதா, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், CBSE, தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P