மார்பைத் துளைத்த இரும்புக் கம்பி - சிக்கலான அறுவைச் சிகிச்சையில் தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய ஸ்டான்லி மருத்துவர்கள்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச) மார்புப் பகுதியைத் துளைத்து உடலின் மறுபுறம் வெளியேறிய இரும்புக் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தொழிலாளிக்கு, சிக்கலான அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
Sta


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச)

மார்புப் பகுதியைத் துளைத்து உடலின் மறுபுறம் வெளியேறிய இரும்புக் கம்பியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தொழிலாளிக்கு, சிக்கலான அவசர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இஷா ஹோக் (24), கும்மிடிப்பூண்டியில் உள்ள பணியிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். அப்போது அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்று அவரது வலது கீழ் மார்புப் பகுதியைத் துளைத்து, இடது தோள்பட்டை அருகே வெளியேறியது.

உடலின் இரு பக்கங்களையும் துளைத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் மருத்துவர் பவானி மற்றும் மருத்துவர் சக்திவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து உடல்நிலையைச் சீராக்கினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், உடலில் ஊடுருவியிருந்த இரும்புக் கம்பி இதயம், முக்கிய ரத்தக் குழாய்கள் மற்றும் உணவுக்குழாய் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு மிக அருகில் சென்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இதயம் மற்றும் நுரையீரல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் மருத்துவர் சரவண கிருஷ்ண ராஜா தலைமையில், இணைப் பேராசிரியர் மருத்துவர் எழில்நம்பி மற்றும் உதவிப் பேராசிரியர் மருத்துவர் கவியா ஆகியோர் இணைந்து, ‘ஸ்டெர்னோதொராக்கோட்டமி’ எனப்படும் மார்புப் பகுதியைத் திறந்து செய்யும் மிகச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.

மயக்கவியல் துறைத் தலைவர் மருத்துவர் கார்த்திக் வழிகாட்டுதலில், மருத்துவர் எழில் மயக்கவியல் சிகிச்சை அளித்தார்.

அறுவைச் சிகிச்சையின்போது, இரும்புக் கம்பி இடது மேல் நுரையீரலைத் துளைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகுந்த கவனத்துடன் இரும்புக் கம்பி அகற்றப்பட்டது. மேலும், நுரையீரலில் ஏற்பட்டிருந்த காயங்களும் சீரமைக்கப்பட்டன.

மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அரவிந்த் வழிகாட்டுதலில் பல்வேறு துறை மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த அறுவைச் சிகிச்சை முற்றிலும் இலவசமாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது, சிக்கலான காயங்களிலிருந்து மீண்டு வரும் இளம் தொழிலாளி நலமுடன் இருப்பதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ