மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க திருநெல்வேலியில் ஆற்றுப்படுத்துதல் மையம் தொடக்கம்
சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.) பள்ளி, கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம், படிப்பில் கவனக்குறைவு, தேர்வு பயம், கோபம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆற்றுப்படு
Nj


சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)

பள்ளி, கல்லூரி மாணவர்களின் மன அழுத்தம், படிப்பில் கவனக்குறைவு, தேர்வு பயம், கோபம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆற்றுப்படுத்துதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் ஆனந்த் மோகன் கூறுகையில்,

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மன அழுத்தம், தேர்வு பயம், படிப்பில் கவனக்குறைவு, இடைநிற்றல், வன்முறைப் போக்கு, செல்போன் மற்றும் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இத்தகைய பிரச்சனைகளால் மாணவர்கள் தவறான பழக்கவழக்கங்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார். குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், பெற்றோருடன் இணக்கமற்ற சூழல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஆலோசனை வழங்கி கல்வி மற்றும் விளையாட்டில் நல்வழிப்படுத்துவதே மையத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

“மாணவர்களுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு நல்வழிப்படுத்துவதே இலக்கு” என ஆட்சியர் குறிப்பிட்டார்.

பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த மையத்தில், பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மூலம் தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும். மையத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சமூக நலத்துறை மூலமாகவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். விரைவில் தொழில்முறை உளவியல் ஆலோசகர் ஒருவரும் நியமிக்கப்பட உள்ளார்.

இந்த மையம் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய சங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாநகர சந்திப்பு காவல் உதவி ஆணையர் முருகதாஸ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ