Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 03 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 4,060 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இன்று 910 சிறப்பு பஸ்களும், நாளை வெள்ளிக்கிழமை 740 பஸ்களும், சனிக்கிழமை 880 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 210 சிறப்பு பஸ்களும், நாளை 115 பஸ்களும், சனிக்கிழமை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சனிக்கிழமை வரை தினமும் 95 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, வார விடுமுறையை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக வருகிற 6-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam