தூத்துக்குடி அருகே 8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் – 9 சக மாணவர்கள் கைது
தூத்துக்குடி, 03 செப்டம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை, சக
கைது


தூத்துக்குடி, 03 செப்டம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி அருகே விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவரை, சக மாணவர்கள் சிலர் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வகுப்பறைக்குள் மாணவனை ஆடைகளை அகற்றும்படி கட்டாயப்படுத்தி, ரப்பர் பேண்ட் மற்றும் ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களால் அவரது உடலில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வகைகளில் மாணவனை துன்புறுத்தியதுடன், இந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் தெரிவித்தால் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்துவோம் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயந்துபோன மாணவர், இந்த விவகாரம் குறித்து பெற்றோர் உள்ளிட்ட யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், சம்பவம் குறித்து அறிந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் தாயாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவரின் தாயார் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து, சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை அழைத்து கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவரின் உடல்நலம் சரியாகும் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டதாக மாணவரின் தாயார் புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த மாணவரின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவரை கடந்த ஆண்டு முதல் 9 மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பிஎன்எஸ் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய 9 மாணவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகமும் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளியில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குழந்தைகள் நலக்குழு மூலம் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து விரிவான அறிக்கை கிடைத்த பின்னர், இந்த விவகாரத்தை மறைக்கும் வகையில் செயல்பட்டதாக தெரியவரும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam