Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச)
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக நான் எழுப்பும் கேள்விகளுக்கு திசைதிருப்பும் நடவடிக்கைகளோ, பழிவாங்கும் நடவடிக்கைகளோ இல்லாமல் முதல்வர் உரிய பதில் அளிப்பார் என நம்புகிறேன். அரசு வெளியிட்டுள்ள காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், 2024-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக அரசு குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசு அமைந்து 116 நாட்கள் ஆகின்றன. இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களை கொண்டுவருவதைவிட, ஏற்கெனவே எங்கள் அரசு கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்வதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது. பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புதுநகர் திட்டம், நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈசிஆர் மேம்பாலம், மாமல்லன் நீர்த்தேக்கம் என திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எங்கள் ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த அரசு அமைந்த பிறகு தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் செல்கிறது. எங்கள் அரசு கொண்டு வந்த திட்டங்களை ஏன் ரத்து செய்தீர்கள்?” என்றார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் முழுத் தள்ளுபடி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், பாதியளவில் நிறைவேற்றப்படுவதாக அறிவிப்புகள் மட்டும் வெளியிடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள். ஆனால், இந்த அரசின் அறிவிப்புகளைப் பார்க்கும்போது அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து ‘தாய்மாமன் காது குத்து திட்டம்’ என பெயர் வைக்கலாம். அரசு அறிவிப்புகள் மக்களிடம் செல்வதைவிட, அரசு வெளியிடும் ரீல்ஸ்கள் மக்களிடம் ரீச் ஆனால் போதும் என்ற நிலையில் செயல்பாடு உள்ளது” என்றும் உதயநிதி விமர்சித்தார்.
நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மற்றும் நீண்டகால விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டம்-ஒழுங்கு குறித்து பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், இன்றைக்கு சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. இது வெறும் குற்றச்சாட்டு அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைமை” என்று விமர்சித்தார்.
மேலும், “116 நாள் ஆட்சி மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய டிராஜடியாக மாறிவிட்டது. தினமும் செய்தித்தாளை திறந்தால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் வருகின்றன. கொலை நடக்காத நாளே இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. அதில் ஒன்றுக்குக்கூட முதல்வர் வாய் திறக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.
கடந்த 2 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து அரசை விமர்சித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தனிநபர் ஒழுக்கம் குறித்து மக்களுக்கு பாடம் எடுப்பதாகவும், ஆளுங்கட்சியினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ