ஒற்றைக் காலில் தத்தித் தத்தி பள்ளிக்கு செல்லும் 7 வயது சிறுமி
லக்னோ , 03 செப்டம்பர் (ஹி.ச.) உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், ஒரு கால் செயலிழந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் 7 வயது சிறுமி ஒருவர் தினமும் 400 மீட்டர் தூரம் ஒற்றைக் காலில் தத்தித் தத்தி பள்ளிக்கு சென்று வருகிறார். சிறு
A


லக்னோ , 03 செப்டம்பர் (ஹி.ச.)

உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், ஒரு கால் செயலிழந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் 7 வயது சிறுமி ஒருவர் தினமும் 400 மீட்டர் தூரம் ஒற்றைக் காலில் தத்தித் தத்தி பள்ளிக்கு சென்று வருகிறார்.

சிறுமி பள்ளிக்கு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளன.

பலியா மாவட்டம் மனியர் பகுதியை சேர்ந்த ரானிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். ராகினிக்கு 6 மாத குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்தது. குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவோ, செயற்கைக் கால் பொருத்தவோ முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், தனது உடல் குறைபாட்டை பொருட்படுத்தாமல் கல்வி கற்பதில் ராகினி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் பள்ளி அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதியோ, மிதிவண்டியோ இல்லாத நிலையில், தினமும் ஒற்றைக் காலில் தத்தித் தத்தி பள்ளிக்கு சென்று வருகிறார்.

சிறுமியின் விடாமுயற்சியையும் கல்வி மீதான ஆர்வத்தையும் கண்டு கிராம மக்கள் பலரும் அவரை பாராட்டி வந்தனர். இந்த நிலையில், ராகினி ஒற்றைக் காலில் பள்ளிக்கு செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் சிறுமியின் மன உறுதியை பாராட்டி வருகின்றனர்.

இந்த வீடியோ மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து பலியா மாவட்ட கலெக்டர் மங்கள பிரசாத் சிங் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ராகினியின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்படும் என்றும், ராகினிக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

உடல் குறைபாடு மற்றும் வறுமை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் கல்விக்காக ராகினி மேற்கொண்டு வரும் இந்த முயற்சி பலருக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA