Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 03 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் அருகே உள்ள தென்குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் 25க்கும் மேற்பட்டோர் சவுக்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபடுவதற்காக டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் ஏறி திருக்கோவிலூர் மார்க்கமாக சென்று கொண்டிருந்தனர்.
இவர்களது டாடா ஏஸ் சரக்கு வாகனம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையான விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் இணைப்பு சாலையில் இந்திரா நகர் என்ற இடத்தில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி, டாடா ஏஸ் சரக்கு வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மோதிய வேகத்தில் டாடா ஏஸ் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த விவசாய கூலி தொழிலாளர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்ததும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் படுகாயமடைந்த விவசாய கூலி தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் சிக்கி விவசாய கூலி தொழிலாளர்கள் 20 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN