Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 03 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1258 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 2737 கன அடியாக இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரே இந்த வரத்து அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாயனூர் கதவணையின் நீர் இருப்பு தற்போது 473 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 2737 கன அடி நீரும் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் கீழ்கட்டளை, தென்கரை மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில் பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து நீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b