Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் பதக்கங்களை வென்று நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் சென்னைக்கு அருகே உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பாக விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர், அறிவுசார் வலிமையை போலவே உடல் வலிமையும் முக்கியம் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்க தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அருகே மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி எனப்படும் மிகப்பெரிய விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த விளையாட்டு நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து விதமான நவீன வசதிகளும், சர்வதேச தரத்திலான பயிற்சி கட்டமைப்புகளும், விஞ்ஞான ரீதியான பயிற்சி முறைகளும் இடம்பெறும். இதன் மூலம் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் உள்பட பதக்கங்களை வெல்வதற்கான சூழல் உருவாக்கப்படும்.
மேலும் தமிழகத்தில் நான்கு மண்டலங்களிலும் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அகாடமிகள் மூலம் இளம் திறமையாளர்கள் கண்டறியப்பட்டு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டம் ரூ.22 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் நவீன விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b