Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
அதிமுக சார்பில், மறைந்த மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. பி.கே. மூக்கையாத் தேவரின் 47-வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் வீர அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைச் செயலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 6.9.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில், மதுரை புறநகர் மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.கே. மூக்கையாத் தேவரின் நினைவிடத்தில், அதிமுக சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலிலும், பொதுச்சேவையிலும் நீண்ட காலம் பணியாற்றிய பி.கே. மூக்கையாத் தேவரின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு வீர அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை அதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN