சாலை வசதியின்றி விபத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணி, ஓட்டுநர் உயிர் தப்பினர்
திருப்பத்தூர், 04 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம், பெரியகம்பியம்பட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்
Ambulance


திருப்பத்தூர், 04 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகம்பியம்பட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிரியா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து, பிரியாவை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி வாகனம் சென்றது. சிறிது தொலைவு சென்ற நிலையில், சாலை மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படும் பகுதியில் ஆம்புலன்ஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் 108 ஆம்புலன்ஸ் சாலையோரத்தில் இறங்கி சாய்ந்த நிலையில் நின்றது. இருப்பினும், ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்தில் ஓட்டுநரும், ஆம்புலன்ஸில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பிரியாவும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

பின்னர் மாற்று 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கர்ப்பிணி பெண் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சாலை வசதி சரியில்லாததே ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அவசர காலத்தில் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் செல்லும் சாலைகளையாவது சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN