ஆந்திர அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் சந்திரபாபு நாயுடு நாளை முக்கிய ஆலோசனை
அமராவதி , 04 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத
A


அமராவதி , 04 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

உண்டவல்லியில் உள்ள முதல்-மந்திரியின் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய ஊதிய மறுஆய்வு குழு (பி.ஆர்.சி.) அமைப்பது, நிலுவையில் உள்ள பி.ஆர்.சி. பலன்களை அமல்படுத்துவது, அகவிலைப்படி (டி.ஏ.) நிலுவைத் தொகைகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, ஆந்திர மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஏ.பி. ஜே.ஏ.சி. நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர்.

ஏ. வித்யாசாகர், டி.வி. ரமணா, பாரதி பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, அரசு ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்-மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோதிலும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான பலன்களை படிப்படியாக வழங்கி வருவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதே நேரத்தில், அரசு தரப்பில் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஊழியர் சங்கங்கள் அவசரப்பட்டு போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உரிய பேச்சுவார்த்தை தளம் இருப்பதால், ஊழியர் சங்கங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

முதல்-மந்திரியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, ஏ.பி. ஜே.ஏ.சி. நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு சாதகமான அணுகுமுறை இருப்பதை வரவேற்பதாகவும், முதல்-மந்திரி தலைமையில் நடைபெறும் ஆலோசனையின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருப்பதால், அந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA