Enter your Email Address to subscribe to our newsletters

ராஜமுந்திரி , 04 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திரபிரதேச மாநில துணை முதல்-மந்திரியும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியுமான பவன் கல்யாண், ராஜமுந்திரியில் செயல்பட்டு வரும் ஆந்திரா பேப்பர் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தாமல் இருப்பதுடன், கோதாவரி ஆற்றையும் மாசுபடுத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறுகையில்:
கடந்த 2016-ம் ஆண்டு முதல் காட்டேறு கிராம பஞ்சாயத்து மற்றும் ராஜமுந்திரி மாநகராட்சிக்கு ஆந்திரா பேப்பர் நிறுவனம் வரி செலுத்தவில்லை என்றும், இதனால் சுமார் ரூ.21.34 கோடி வரி பாக்கி இருப்பதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
வரியை செலுத்துமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பும் ஒவ்வொரு முறையும் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
கழிவுநீர் வெளியேற்றம்
ராஜமுந்திரி நகரில் தினமும் சுமார் 70 மில்லியன் லிட்டர் திரவக் கழிவுகள் உருவாகும் நிலையில், அதில் சுமார் 35 மில்லியன் லிட்டர் கழிவுகள் ஆந்திரா பேப்பர் மில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாக பவன் கல்யாண் தெரிவித்தார்.
இதன் மூலம் நகரின் மொத்த திரவக் கழிவுகளில் சுமார் பாதி இந்த தொழிற்சாலையிலிருந்தே வருவதாக அவர் கூறினார்.
தொழிற்சாலையின் கழிவுநீர் மாதிரிகளில் சில வேதிப்பொருட்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகளை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கழிவுநீரில் உள்ள BOD அளவு லிட்டருக்கு 36 மில்லிகிராம் இருப்பதாகவும், பாஸ்பேட் மற்றும் சல்பைடு உள்ளிட்டவற்றின் அளவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கோதாவரி ஆற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்தார்.
மேலும், ஆற்றின் நீரின் தரம் குறைவதுடன், துர்நாற்றம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் தான் நேரடியாக அந்த பகுதிகளை பார்வையிட்டு, நிலத்தடி நீர் மாசுபடாமல் நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்திடம் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதனை நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடும் நடவடிக்கை
தொழிற்சாலை நிர்வாகம் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பவன் கல்யாண் எச்சரித்தார்.
தொழிற்சாலை செயல்பாடுகளை நிறுத்துவது, அபராதம் விதிப்பது, நிறுவனத்தை சீல் வைப்பது, உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயங்காது என்றும் அவர் கூறினார்.
எனினும், தொழிற்சாலைகளை தேவையின்றி பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி, தவறுகளை சரிசெய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார். கடந்த 3 மாதங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நிறுவன நிர்வாகத்தினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, நிறுவனத்துக்கு உடனடியாக சம்மன் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பவன் கல்யாண் உத்தரவிட்டார்.
இந்த வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அட்வகேட் ஜெனரல் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார்.
கோதாவரி ஆற்றை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், “சுத்தமான கோதாவரி - புனித புஷ்கரங்கள்” என்ற இலக்குடன் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA